New Updates! Fresh news just arrived.

ரயில் பருவச்சீட்டுகளை இணையம் மூலம் பெற புதிய வசதி!

News

ரயில் பருவச்சீட்டுகளை இணையம் மூலம் பெற புதிய வசதி!

August 22, 2026 7:56 am
ரயில் பருவச்சீட்டுகளை இணையம் மூலம் பெற புதிய வசதி!
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இணையவழியில் ரயில் பருவச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், ஒக்டோபர் மாதத்திற்குள் தடையின்றி சேவையை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கான இணையவழி ரயில் பருவச்சீட்டு சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதனிடையே, வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் சாரதிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்து வாகன சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சி வழங்குதல், தொடர்ச்சியான போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யும் வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரத்திலான தலைக்கவசங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான போக்குவரத்து ஒழுங்குமுறையொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now