New Updates! Fresh news just arrived.

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை: வ...

News

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை: வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என பாராட்டு!

April 22, 2026 4:14 pm
கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை: வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என பாராட்டு!
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படுகின்ற அதிபர் வெற்றிடங்களினை நிரப்புவதற்கான விண்ணப்ப கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்களானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய செயலாளர் கே. குணநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் படி, இதுவரைக்கும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுக்கு கீழ் இருந்த விண்ணப்ப கோரல் அதிகாரம், தற்போது அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக, ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பாடசாலைகளினுடைய தேவைகளுக்கு ஏற்ப விரைவான மற்றும் செயற்பாட்டுத் திறன் மிக்க நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த புதிய முறையின் கீழ், 1AB, 1C, II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு உரிய விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களினை தெரிவு செய்யப்பட வேண்டும். பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களினுடைய விபரங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் மூலம் மாகாண கல்விச் செயலாளரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மாகாண நியமன அதிகாரியாக செயல்படும் மாகாண கல்விச் செயலாளரின் இறுதி நியமனத்தினை வழங்குவார். மேலும், 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் தரம் I, II தரப் பாடசாலைகளுக்கு தரம் II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கு தரம் III அதிபர்களினை விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மாகாண மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கோரப்பட வேண்டியதோடு, வெற்றிடம் உருவாகும் தினத்திற்குப் பூர்வமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பங்களானது அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே — ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் — விண்ணப்பங்களானது கோரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயல்முறைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இதற்கு முன்பு மாகாண மட்டத்தில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து சுற்றுநிருபங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்த புதிய நடைமுறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி நிபுணத்துவ சேவை ஆர்வலரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமாகிய ஏ.எல்.எம். முக்தார், “கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளானது நீக்கப்பட்டு, தெளிவான மற்றும் கட்டுப்பாடுடைய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதானது, மிகவும் பாராட்டத்தக்கது. இது நியமன செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையினையும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மாற்றம் வலய மட்டத்தில் பொறுப்புணர்வினை அதிகரித்து, தகுதியானவர்களினை சரியான நேரத்தில் தெரிவு செய்ய உதவும் எனவும் அவர் வலியுறுத்தினார்

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now