New Updates! Fresh news just arrived.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்க...

News

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்!

July 19, 2026 12:03 pm
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய விசேட பாதுகாப்பு ஸ்டிக்கர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் பிரத்யேக அடையாள இலக்கத்துடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர் வழங்கப்படவுள்ளது. அந்த ஸ்டிக்கருடன் தொடர்புடைய வாகன உரிமையாளரின் பெயர், தொலைபேசி இலக்கம், வாகன மற்றும் எஞ்சின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் பொலிஸ் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

எதிர்காலத்தில் ஏதேனும் குற்றச்செயல், திருட்டு அல்லது விபத்து சம்பவங்கள் இடம்பெற்றால், சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கமெராக்கள் மூலம் ஸ்டிக்கர் இலக்கத்தை அடையாளம் கண்டு, இலங்கையின் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலிருந்தும் குறித்த வாகனத்தின் விபரங்களை விரைவாகக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, அம்பாறை மற்றும் கல்முனை பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை கணிசமான எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை உடனடியாக பதிவு செய்து, இந்த பாதுகாப்புத் திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் பணிப்புரைக்கமையும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமையும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில், சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர். விஜயவர்த்தன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now