New Updates! Fresh news just arrived.

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்...

News

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் நோக்கத்தையே பாதிக்கும் கருத்துக்களை ஏற்க முடியாது: ஆளுநர்!

August 13, 2026 2:19 pm
நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் நோக்கத்தையே பாதிக்கும் கருத்துக்களை ஏற்க முடியாது: ஆளுநர்!
நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வு இன்று (13.08.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு உரையாற்றினார். வடக்கு மாகாண பிரதம செயலாளர் சார்பில் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ந.சுதாகரன் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர், விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி என்பன அனைத்தும் நிலத்தடி நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் தேசியப் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாகப் பதிவுசெய்யும் நவீன கண்காணிப்பு முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பெறுபேறுகள் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என ஆளுநர் குறிப்பிட்டார்.

தொண்டமனாறு நீரேரித் தடுப்பணைத் திட்டத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட ஆளுநர், பல மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், குறுகியகால அழுத்தங்களின் அடிப்படையில் அவற்றின் நோக்கத்தை பாதிக்கும் தீர்வுகளை முன்வைப்பது பொருத்தமற்றது என்றார். எதிர்காலத் தீர்மானங்கள் அனைத்தும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல என்றும், திணைக்களங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால்தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now