New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட...

News

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

February 11, 2026 4:24 pm
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் நிந்தவூர் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள், கல்வி, வீதி மற்றும் வடிகால் அபிவிருத்தி, மின்சாரம், விளையாட்டு வசதிகள் மற்றும் குடியிருப்பு தேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 32 முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

கடலரிப்பு தடுப்பு வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல், இலங்கை மின்சார சபை நிந்தவூர் பாவனையாளர் சேவை நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அரச காணி ஒதுக்கீடு, பல பாடசாலைகளில் கட்டிடங்கள், வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடங்கள், சுற்று மதில்கள், உள்ளக வீதிகள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

அத்துடன், பல பிரிவுகளில் கிறவல் பாதைகளுக்கு கொங்கிரீட் இடுதல், கார்பட் வீதிகள் அமைத்தல் மற்றும் புனரமைத்தல், வடிகால் அகல விரிவாக்கம், வடிகால்களை துப்பரவு செய்தல், மழைக்கால வெள்ளப் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள், முறையற்ற தொலைத்தொடர்பு கம்பங்களை அகற்றுதல் போன்ற பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிந்தவூர் அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான வீதியிலிருந்து மேற்குப் பகுதியில் 500 மீட்டர் தூரம் வரை மண் நிரப்பி குடியிருப்பு காணிகளாக மாற்றும் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதேபோல், விவசாயத்திற்கு பொருத்தமற்றதாக அடையாளம் காணப்பட்ட காணிகளை மண் நிரப்பி குடியிருப்பு தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமா லெவ்வை, எம்.எஸ்.அப்துல் வாசித், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now