New Updates! Fresh news just arrived.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு...

News

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி!

March 17, 2026 10:03 pm
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது:  ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி!
மார்ச் மாதத்திற்குத் தேவையான 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு ஜனாதிபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள் வருமாறு:

"எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இரு நீண்டகால டெண்டர்களின் கீழ் தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு கப்பல்கள் உரிய காலத்திற்கு கிடைக்கவில்லை. அத்துடன் தனியார் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து வர வேண்டிய ஒரு கப்பலும் தாமதமாகியுள்ளது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பையும் பாதிக்கிறது.

இதனைச் சமாளிக்க இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ​பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள அவசர டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேலும், டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தைத் தடுத்ததால் நாம் மார்ச் மாதத்திற்கு மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்தோம். அவை அனைத்தும் தற்போது கிடைத்துள்ளன. மற்றுமொரு கப்பல் நாளை அல்லது மறுதினம் வரும் என்பதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது."

"QR முறைமையில் சிக்கல்கள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தே ஞாயிற்றுக்கிழமை அதனை ஆரம்பித்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் கையிருப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. QR ஒதுக்கீடு போதாத அத்தியாவசியத் துறைகளுக்கு அதனை அதிகரித்து வழங்க அமைச்சுக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விநியோகச் சங்கிலி ஆராயப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குத் தேவையான உணவுகளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இருப்பதால் அத்தியாவசிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது."

"ஒவ்வொரு அமைச்சும் தமது எரிபொருள் பயன்பாட்டை ஆகக்குறைந்தது 25% ஆல் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரச சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தற்போது பின்பற்றப்படும் வேலை நேர ஒழுங்குமுறை (இரண்டு நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை) வெற்றிகரமாக உள்ளது."

"எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ய அவசர டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவும் எரிபொருள் 'கார்டெல்களை' நாம் உடைத்து வருகிறோம்.

ஊழல் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை கொண்டுள்ளேன். எந்தவொரு அமைச்சராவது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார். அமைச்சர் ஜெயக்கொடி மீதான குற்றச்சாட்டு 2014 இல் அவர் ஒரு அரச அதிகாரியாக இருந்தபோது ஏற்பட்ட கொள்முதல் சிக்கலாகும். அவர் அமைச்சராக இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டால் நாளைக்கே அவரை நீக்குவேன்."

"தற்போதைய திட்டங்களின்படி மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை எழவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைப் பொறுத்தே எதிர்கால தீர்மானங்கள் அமையும்" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now