New Updates! Fresh news just arrived.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்: சந்த...

News

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்: சந்தேகநபர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

November 4, 2026 3:08 pm
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்: சந்தேகநபர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா குருந்துவத்தை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், போராட்டத்தின்போது பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் காட்சி பலகைகளை அகற்றச் சென்ற கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பூங்கா பொறுப்பதிகாரி ஆகியோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பில் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குருந்துவத்தை காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம காவல் பரிசோதகர் சாகர தயரத்ன இந்த முறைப்பாடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது, நீதிமன்ற உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் பிக்குகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சட்டவிரோதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றச் சென்ற மாநகர சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதித்து, அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் பெற்றிருந்த இடைக்கால உத்தரவு தொடர்பான முறைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now