New Updates! Fresh news just arrived.

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்க...

News

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் முயற்சி!

October 8, 2026 8:42 pm
ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் முயற்சி!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 'Online Examination Database Management System' உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த புதிய டிஜிட்டல் முறைமை பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடக் கூட்ட மண்டபத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்கலினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், BICT கற்கைநெறியின் இணைப்பாளர் கலாநிதி ஐ.எம். காலித், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் எம்.ஜெ. அஹமட் சபானி, ஏ.ஆர். பாத்திமா ஷபானா, கலாநிதி எம்.ஐ.எப். கரீமா, ஏ.எல். சரீபுதீன், கலாநிதி ஐ. றைசல், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார், முகாமைத்துவ உதவியாளர்களான எம்.ஜி. றோசன் மற்றும் ஏ.கே. றஸீன் உள்ளிட்ட முக்கிய கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப BICT பட்டப்படிப்புடன் தொடர்புடைய பரீட்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, விரைவாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கும் நோக்கில் இம்முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான சகல தரவுகளையும் ஒரே டிஜிட்டல் தரவுத்தளத்தில் கணினிமயப்படுத்துவதன் மூலம் பாரம்பரிய ஆவணப் பயன்பாடு குறைக்கப்பட்டு, பரீட்சை நிர்வாகத்தில் வேகம், துல்லியம், தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன உறுதி செய்யப்பட்டுள்ளன.ஒருங்கிணைக்கப்பட்ட இத்தரவுத்தளத்தின் மூலம் பரீட்சை நடவடிக்கைகளின் பல்வேறு கட்டங்களை மிகத் திறம்படக் கண்காணிக்க முடியும் என்பதுடன், தேவையான தரவுகளை ஒரே கிளிக்கில் விரைவாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும். எதிர்வரும் காலங்களில் BICT பட்டப்படிப்பின் பரீட்சைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக இந்த Online முறைமையின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

இப் புதிய CEDPL Examination Database Management System-ஐ தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் எம்.ஜி. றோசன் முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளதுடன், நிகழ்வின் போது அதன் செயற்பாட்டு முறைகளையும் விளக்கிக் கூறினார். பல்கலைக்கழகத்தின் உள்ளக மனிதவளத்தையும் தொழில்நுட்ப அறிவையும் மட்டுமே பயன்படுத்தி இத்தீர்வு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கான பரீட்சை நிர்வாகத்தையே முதலாவதாகத் தொழில்நுட்பமயப்படுத்தியுள்ளமை “கல்வி நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்றம்” என்ற இலக்கிற்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளதாகக் கல்விச் சமூகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now