New Updates! Fresh news just arrived.

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றம் விரைவான த...

News

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றம் விரைவான தீர்மானம் எடுக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு!

October 31, 2026 4:46 am
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றம் விரைவான தீர்மானம் எடுக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு!
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் பற்றி ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்குழு காலம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் மாகாணசபைத் தேர்தல் செயற்பாடுகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. ஏனெனில் 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.

தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.பாராளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்.

பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு அதற்குரிய யோசனைகளை முன்வைத்துள்ளோம். தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் யோசனைகளை முன்வைப்போம். இந்த விடயம் குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். எதிர்வரும் மாதம் செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் செயற்குழுவின் காலத்தின் காலத்தை நீட்டிக்காமல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now