New Updates! Fresh news just arrived.

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் நான்கு பிரதான அபிவிர...

News

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய திட்டம்!

July 16, 2026 6:07 pm
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய திட்டம்!
முடக்கப்பட்டிருந்த 14 பில்லியன் ரூபா செலவிலான கெட்டம்பே மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலோபாயத் திட்டத்தின்கீழ் விரைவுபடுத்தப்படுகின்றன.

அமைச்சர் கே. டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (15) விசேட கள ஆய்வு நடைபெற்றது.

மத்திய மாகாண அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கண்டி புனித நகரத்தை மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நான்கு பிரதான உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அவசரத் திட்டங்களை வகுத்துள்ளது.

இதற்கமைய, கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் கெட்டம்பே சந்தி மேம்பாலம், மஹய்யாவ நிலத்தடி சுரங்கப்பாதை, வில்லியம் கொபல்லவ வீதி மற்றும் லூயிஸ் பீரிஸ் வீதி ஆகிய திட்டங்களை மூலோபாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இவ்வாறு வேகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் தற்போதைய கட்டுமான முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்கான விசேட கள ஆய்வு விஜயமொன்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

14 பில்லியன் ரூபா கெட்டம்பே மேம்பாலம் மீண்டும் உயிர் பெறுகிறது.
அரசியல், நிர்வாகம் மற்றும் நிதி ரீதியான தடைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதற்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே சந்தி மேம்பாலத்தின் அபிவிருத்திப் பணிகள், தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

கன்னொருவ - கண்டி மற்றும் பேராதனை - கண்டி உள்ளிட்ட பல பிரதான வீதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான தீர்வாக அமையும் இந்த கெட்டம்பே மேம்பாலத் திட்டத்திற்காக 14 பில்லியன் ரூபா பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படும் வில்லியம் கொபல்லவ மற்றும் லூயிஸ் பீரிஸ் வீதிகள்...
கண்டி நகரத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக நான்கு வரிகளாக (Lanes) அகலப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும் வில்லியம் கொபல்லவ வீதியின் அபிவிருத்திப் பணிகளும் இங்கு அமைச்சர்களின் தீவிர கவனத்திற்கு உள்ளாகின. குறித்த வீதித் திட்டத்திற்காக 675 மில்லியன் ரூபா நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கண்டி - பூவெலிகட ஊடாக அம்பிட்டிய நகரினை இணைக்கும் லூயிஸ் பீரிஸ் வீதிக்கு 539 மில்லியன் ரூபா செலவில் இருவழிப் பாதையாகவும் இருபுறமும் முறையான நடைபாதைகளோடும் மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான மற்றும் மண்சரிவு அபாயமுள்ள நிலப்பரப்பு ஊடாக இவ்வீதி அமைந்திருப்பதால், மலைப் பகுதிகளை வலுப்படுத்துவதற்காக Soil Nailing எனப்படும் நவீன பாதுகாப்பு பொறியியல் முறையைப் பயன்படுத்தி இவ்வீதி புதிய திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

650 மில்லியன் ரூபா செலவிலான மஹய்யாவ சுரங்கப்பாதை...
கண்டி - யாழ்ப்பாணம் (A-009) பிரதான வீதிக்கும் மலைநாட்டு புகையிரதப் பாதைக்கும் ஒரே நேரத்தில் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மஹய்யாவ சுரங்கப்பாதையின் தற்போதைய நிலவரத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். 650 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தச் சுரங்கப்பாதை 31.7 மீற்றர் நீளமும், 21.8 மீற்றர் அகலமும், 09 மீற்றர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.

இந்த அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உயர்தரத்துடன் நிறைவு செய்து பொதுமக்களுக்கு விரைவான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கினர்.

(எஸ். சினீஸ் கான்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now