New Updates! Fresh news just arrived.

ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் பொலிஸார் புதிய அறிவுறுத்தல...

News

ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் பொலிஸார் புதிய அறிவுறுத்தல்!

August 30, 2026 2:57 pm
ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் பொலிஸார் புதிய அறிவுறுத்தல்!
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிக ஒலி காரணமாக கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் தீர்ப்பின் அடிப்படையில், பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது பொதுத் தொல்லையாகக் கருதப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரையான நேரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது. எனினும், மத நிகழ்வுகள் அல்லது விசேட நிகழ்வுகளுக்குத் தேவையான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு உரிய அனுமதி வழங்கப்படலாம்.

பொலிஸ் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போது பின்வரும் நேர வரம்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்:

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை
வெள்ளி மற்றும் சனிக்கிழமை:அதிகாலை 1.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: அதிகாலை 12.30 மணி வரை

எனினும், குறித்த நேர வரம்புகள் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைவருக்கும் தானாகக் கிடைக்கும் உரிமையாகக் கருதப்படாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒலியின் அளவு அருகிலுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அனுமதியின் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர்.

ஒலி தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்து, அதன் மூலம் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அதிக ஒலியை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

அந்த அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து அதிக ஒலியுடன் செயற்பட்டால், ஒலி உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றுவது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

எனவே, சட்டவிரோதமான முறையில் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படும் சம்பவங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now