New Updates! Fresh news just arrived.

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை! - Gu...

News

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை!

May 24, 2026 9:54 pm
வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை!
உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளினை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளினைப் பொருத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளானது இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட இலக்கத் தகடுகளினைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக வாகனங்களினை செலுத்த முடியாது எனப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகனத்தினுடைய இலக்கத்தை 'A4' அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகஸ்த்தர் ஒருவர் இல்லாத காரணத்தால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கடந்த 10 மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளினை வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது.

இதன் காரணமாக சுமார் 400,000 இலக்கத் தகடுகள் தேங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளினை வழங்கும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளினை காட்சிப்படுத்தும் வாகனங்களுக்குப் பொலிஸார் அபராதம் விதிப்பது தொடர்பிலும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பதிலளித்துள்ள பொலிஸார், அங்கீகரிக்கப்பட்ட தரங்களினை பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கையானது எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now