New Updates! Fresh news just arrived.

அரசாங்கம் மாறியது போல் அரசியல்வாதிகளும் மாற வேண்டும் - ஆள...

News

அரசாங்கம் மாறியது போல் அரசியல்வாதிகளும் மாற வேண்டும் - ஆளுநர் தெரிவிப்பு!

July 27, 2026 5:49 pm
அரசாங்கம் மாறியது போல் அரசியல்வாதிகளும் மாற வேண்டும் - ஆளுநர் தெரிவிப்பு!
அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போல் அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றமானது மக்களின் வாசற்படியை எட்டும், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

'சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை' எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (27) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. இதன் பிரதான நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் மத்தியில் மிக விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

மனச்சாட்சியை விழித்தெழச் செய்யும் உறுதிமொழி

நாம் இன்று இங்கு கூடியிருப்பது வெறும் ஒரு அரசாங்க நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவோ, ஒரு உறுதிமொழியினை உச்சரிப்பதற்காகவோ அல்ல. எமது மனச்சாட்சியை மீண்டும் ஒருமுறை விழித்தெழச் செய்வதற்காகவே இங்கு கூடி இருக்கின்றோம். சில நிமிடங்களுக்கு முன்பு நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி ஒரு நிர்வாக நடைமுறையல்ல. அது எமது பதவியை விட உயர்ந்த எமது மனச்சாட்சியின் முன்னால் நாம் நாமே எடுத்துக் கொண்ட புனித உறுதியாகும். இன்று ஒலித்த அந்த வார்த்தைகள், அலுவலக மேசைகளில் முடிவுகளாகவும், கோப்புகளில் நீதியாகவும், மக்களை அணுகும் எமது புன்னகையில் மனிதநேயமாகவும் மாற வேண்டும்.

நேர்மையின் உண்மையான அர்த்தம்

நேர்மை என்பது பணம் வாங்காமை மட்டுமல்ல் ஊழல் செய்யாமையும் மட்டுமல்ல. எமக்காக ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை, எமக்காக அல்லாமல் மக்களுக்காகப் பயன்படுத்துவதே நேர்மையாகும். ஒரு ஏழை மனிதனின் கோப்பைக் காரணமின்றித் தாமதப்படுத்தாமல் இருப்பதும், பொது வளங்களைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதும், தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஒரே அளவுகோலால் நீதி வழங்குவதுமே உண்மையான நேர்மையாகும். சட்டம் பார்க்காத இடத்திலும் மனச்சாட்சி பார்க்கிறது என்ற உணர்வோடு நாம் வாழ வேண்டும்.

முறைமை மாற்றமும் அரச அதிகாரிகளும்

2022 ஆம் ஆண்டு இந்த நாடு அனுபவித்த 'அரகலய' போராட்டத்தின் மையச் சொல் 'முறைமை மாற்றம்' என்பதாகும். அந்த இரண்டு சொற்களில் ஒரு தலைமுறையின் கனவும், கோபமும், எதிர்பார்ப்பும் அடங்கியிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நேர்மையான நிர்வாகத்துக்கான அரசியல் விருப்பமும், அரசியல் தலைமைத்துவமும் உருவாகியுள்ளது. ஊழலுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கக்கூடாது என்ற தெளிவான நிலைப்பாடு வந்துள்ளது. ஆனால், அரசியல் நேர்மையாக இருந்தும் நிர்வாகம் நேர்மையற்றதாக இருந்தால், மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி மலராது. அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள் என்று மட்டும் நாம் திருப்தியடைய முடியாது; அதிகாரிகளும் மாற வேண்டும்.

நேர்மையாளர்களைக் குறிவைக்கும் அவதூறுகள்

நேர்மையாக இருப்பவர்கள் சில நேரங்களில் தனிமையையும் மிரட்டல்களையும் சந்திப்பார்கள். நேர்மையான மனிதன், நேர்மையற்றவர்களின் சுகவாழ்க்கைக்கு ஒரு தடையாக மாறுவதாலேயே சமூக ஊடகங்களில் முகம் தெரியாத கணக்குகள் ஊடாக நேர்மையான அதிகாரிகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இது ஒரு தனிமனிதனை மட்டுமல்ல, நேர்மையையே தாக்கும் முயற்சியாகும். ஆனால், அவதூறுகளைக் கண்டும் அச்சுறுத்தல்களைக் கண்டும் அஞ்ச வேண்டாம். உங்களது இலக்கு மக்களின் நலனாக இருக்கட்டும். அன்று நேர்மையாக இருந்தமையால் ஓரங்கட்டப்பட்டவர்கள், தற்போதைய அரசாங்கத்தினால் உரிய மரியாதைகளோடு அமர்த்தப்படுகின்றார்கள்.

மனச்சாட்சியின் நீதிமன்றமும் கர்மாவின் நியதியும்

நேர்மையிலிருந்து விலகும் பயணம் ஒரு சிறிய சமரசத்தில்தான் ஆரம்பிக்கின்றது. அலுவலகத்தில் அரசாங்கம் வழங்கிய ஒரு வெற்றுக் காகிதத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்துவதிலோ, ஒரு கோப்பை நியாயமின்றித் தாமதப்படுத்துவதிலோ அது ஆரம்பிக்கிறது. சாட்சிகள் இல்லாமையால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், மனச்சாட்சியின் நீதிமன்றத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. 'விதைத்ததே விளையும்' என்பது இயற்கையின் மாறாத நியதியாகும். நேர்மையை விதைப்பவர் நம்பிக்கையினை அறுவடை செய்வார்; ஊழலை விதைப்பவர் அவமானத்தினையே அறுவடை செய்வார்.

இறுதி அழைப்பு

நீங்கள் இன்று எடுத்த உறுதியை, அரசாங்கம் கட்டாயப்படுத்தியதால் எடுத்ததாக எண்ணாதீர்கள்; உங்கள் மனச்சாட்சியின் முன்னால் எந்த நாளிலும் தலைகுனியாமல் நிற்கும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக எடுத்த உறுதியாக எண்ணுங்கள். 'உன்னைத் திருத்து, சமூகம் தானாகத் திருந்தும்' என்பதற்கு இணங்க, இங்குள்ள அதிகாரிகளில் 50 சதவீதம் பேர் இன்று எடுத்த உறுதிமொழியின்படி நாளை தொடக்கம் வாழ்ந்தாலே, மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் வெகு தொலைவிலிருக்காது, என்று தெரிவித்து ஆளுநர் தனது நீண்ட உரையினை நிறைவு செய்தார்.

முன்னதாக வளாக முன்றலில் தேசியக் கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் மற்றும் மாகாணக் கீதம் என்பன இசைக்கப்பட்டன. தொடர்ந்து நேர்மைக் கலாசாரம் தொடர்பான ஒலிப்பதிவு ஒலிக்கவிடப்பட்டது. அதன் பின்னர் நேர்மைக்கான சத்தியப்பிரமாணம் மற்றும் உறுதியுரை ஏற்கப்பட்டதுடன், மரநடுகை மற்றும் மரக்கன்று விநியோகமும் இடம்பெற்றன.

அதனைத்தோடு, கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளரான திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சிவகுருநாதன் திருவாகரன் நேர்மையான சேவை தொடர்பில் சிறப்புரையாற்றியதுடன், உதவிப் பிரதம செயலாளர் அனற் நிந்துஷா அன்ரனி டினேஷ் நன்றியுரையாற்றினார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now