New Updates! Fresh news just arrived.

கனேடிய உயர்ஸ்தானிகருடன் காரைதீவு பிரதேச தேவைகள் குறித்து ...

News

கனேடிய உயர்ஸ்தானிகருடன் காரைதீவு பிரதேச தேவைகள் குறித்து தவிசாளர் பாஸ்கரன் முக்கிய கலந்துரையாடல்!

May 2, 2026 6:03 pm
கனேடிய உயர்ஸ்தானிகருடன் காரைதீவு பிரதேச தேவைகள் குறித்து தவிசாளர் பாஸ்கரன் முக்கிய கலந்துரையாடல்!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் இன்று ஆலையடிவேம்பில் சந்தித்து, காரைதீவு பிரதேசத்தின் அவசர தேவைகள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின் போது, பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து தவிசாளர் கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் நிலவும் சவால்கள் தொடர்பாக உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், காரைதீவு பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்திக்கான திட்டங்களை முன்வைத்து, அவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரதேசத்தின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பு, உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் சர்வதேச தூதரகங்களுக்கிடையிலான நேரடி தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களின் மீளுருவாக்கம் மற்றும் சமநிலை அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கத்திற்கும் இது வழிவகுக்கும் என தவிசாளர் பாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டார்.

குறித்த நிகழ்வில், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தினுடைய அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியனன் கணேசநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற இத்தகைய நேரடி முயற்சிகள், மத்திய அரசியல் அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலையான மற்றும் நீடித்த அபிவிருத்தியினை உறுதி செய்ய முடியும் எனவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேசமயம், பிரதேச மக்களின் தேவைகளை சர்வதேச மேடைகளில் முன்வைக்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now