New Updates! Fresh news just arrived.

வீதி அபிவிருத்திப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற ஜனாதிபதி அ...

News

வீதி அபிவிருத்திப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற ஜனாதிபதி அறிவுறுத்தல்

August 12, 2026 7:20 am
வீதி அபிவிருத்திப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்து, பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய கலந்துரையாடலின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பொதுமக்களால் முன்வைக்கப்படும் அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் டித்வா அனர்த்த நிலைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக வீதியின் நான்காம் கட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள குருநாகல்–கலேவெல பகுதி, ருவன்புர அதிவேகப் பாதை உள்ளிட்ட திட்டங்களும் இதன்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடவத்தை–மீரிகம பகுதி, துறைமுக நுழைவுச் சாலை மற்றும் மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொத்துஹெர–கலெகதர பகுதி ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றமும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிவேக வீதிகளுக்கான நுழைவு மற்றும் இடைமாற்று இணைப்புகளில் காணப்படும் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் குருநாகல்–கலேவெல வீதி திட்டத்தில் நட்டஈடு வழங்குவது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு–ஹொரணை வரையிலான பேஸ்லைன் வீதி நீடிப்பு மற்றும் பதுளை–செங்கலடி வீதியின் அம்பாறை–உஹனை பகுதி அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வீதிகளை முறையாகப் பராமரிப்பது தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சில வீதிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் புனரமைக்கப்படாத A மற்றும் B வகையைச் சேர்ந்த 130 வீதிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இடம்பெறும் நிர்மாணத் திட்டங்களின் நிலைமையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பதுளை–பிபிலை வீதியின் நிலைமையை சீரமைத்து, அதன் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயல்படுத்தப்படும் போக்குவரத்து இணைப்புகள் மற்றும் சொத்து முகாமைத்துவத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வீதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக National Traffic Database திட்டத்தை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பொலிஸ், வீதிப் பாதுகாப்பு மற்றும் வீதி முகாமைத்துவப் பிரிவுகளை ஒருங்கிணைத்து ஸ்மார்ட் வீதி சமிக்ஞைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உள்ளடக்கிய கட்டமைப்பாக இதனை எதிர்காலத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கம் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதுடன், ஒழுங்கான வீதிப் பயன்பாட்டு கலாசாரத்தை உருவாக்குவதாகும்.

மேலும், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதுடன், ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை வழங்குவது மற்றும் சிறிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை படிப்படியாக மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now