New Updates! Fresh news just arrived.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்! -...

News

அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!

January 5, 2026 9:05 pm
அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!
தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளினை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் குறித்த நிதி ஒதுக்கீடுகளினைபயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது 'செலவு செய்யப்படாத நிதி' என்று கணிக்கப்படும் சூழ்நிலை நாட்டில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று எந்தவித தாமதமும் இன்றி தேவையான நிதியை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சுகளின் செயலாளர்களோடு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் (ECF) வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13% மாத்திரமே செலவிட முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்னும் அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒதுக்கப்பட்ட நிதியினை முறையாக நிர்வகிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தினை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு எனவும், முன்மொழியப்பட்ட திட்டங்களினை செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளினை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியினுடைய செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மற்றும் அனைத்து அமைச்சுகளினுடைய செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now