New Updates! Fresh news just arrived.

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் - Gur...

News

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

August 13, 2026 6:37 am
நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு எந்தவொரு தனிநபரையோ குழுவையோ குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி, நீதித்துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றங்களின் செயற்பாடுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணை, வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்துவதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மேல்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நீதிமன்றங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய பௌதிக வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த நலனை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் பரந்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இது தமது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலான தீர்மானமோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நோக்கமோ அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் ஓய்வு பெறும் வயதை நீடித்தல் போன்ற விடயங்களில் தங்களுக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு இல்லை என சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எனினும், முன்மொழிவு தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தி பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சிறந்தது என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பல சிரேஷ்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now