New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!

News

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!

May 1, 2026 2:53 am
ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

'டித்வா' போன்ற இயற்கை அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, 2025 ஆம் ஆண்டில் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்தமை, 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானத்தைப் பெற்றமை, முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பைப் பேணியமை, பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியமை, இலங்கை வரலாற்றில் அரச வருமான இலக்குகளை விஞ்சிய ஒரே ஆண்டு மற்றும் அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தைப் பெற்றமை உட்பட நாட்டின் முக்கிய பொருளாதாரக் காரணிகளில் பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பதிவு செய்துள்ளோம்.

இத்தகைய தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், உழைக்கும் மக்களின் உழைப்பின் மதிப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப அரச கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அரச ஊழியர்களினுடைய அடிப்படைச் சம்பளத்தினை அதிகரித்தல், தனியார் துறை ஊழியர்களினுடைய அடிப்படைச் சம்பளத்தினை அதிகரித்தல், அத்தோடு, 2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்துள்ள அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமையினை வழங்குதல், பெருந்தோட்டத் தொழிலாளர்களினுடைய சம்பளத்தினை 1,750 ரூபாவாக அதிகரித்தல், பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபடுவது தொடர்பிலான சட்டத் திருத்தங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிள்ளைகளினுடைய கல்விக்காக 'மஹபொல' புலமைப்பரிசில் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரித்தல் உட்பட இந்நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மட்டுமன்றி உற்பத்தியாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான பல சலுகைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்துகிறேன்.

கடந்த 'டித்வா' சூறாவளியின் போது இந்நாட்டினுடைய உழைக்கும் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கியமை, வரலாற்றில் அனர்த்தமொன்றின் போது வழங்கப்பட்ட அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்கியமை, வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தியமை ஊடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னரை விட உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் 'Rebuilding Sri Lanka' திட்டத்தை நாம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம் என்பதை நினைவு கூறுகிறோம்.

இந்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் துயரங்கள் மற்றும் கண்ணீருக்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான பொருளாதாரத்தையும் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இதற்காக நாளுக்கு நாள் நவீனமடையும் உற்பத்தி சக்திகள் மற்றும் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப மனித வளம், பொருளாதாரம் மற்றும் உற்பத்தி தொடர்புகளை மேம்படுத்துவதை முதன்மைப் பணியாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம், 'Clean Sri Lanka' திட்டம் மற்றும் 'சமூக சக்தி' திட்டம் போன்றவையானது இதற்காகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு தோல்வியுறாத பயணத்திற்காக நாம் பணியாற்றிக் கொண்டே கற்றுக்கொண்டும் கற்றுக்கொண்டே பணியாற்றியும் வருறோம். நிச்சயமாக ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு அன்பான உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now