New Updates! Fresh news just arrived.

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் கு...

News

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் குழு அமைச்சரவை பத்திரத்தை இரத்து செய்யக்கோரி - இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

June 29, 2026 5:51 pm
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் குழு அமைச்சரவை பத்திரத்தை இரத்து செய்யக்கோரி - இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாட்சியை மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமையினை மீறும் செயலினை இலங்கை நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோரப் பகுதி அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறையானது, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான நடவடிக்கை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையினை இந்த முடிவு அப்பட்டமாக மீறுவதாகத் தெரிவித்துள்ளது, இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு மிக அவசரமான கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், குறித்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக கைவிடுமாறு அல்லது இடைநிறுத்துமாறு உத்தியோகபூர்வமாகவும் கோரிக்கை விடுத்துள்ளது.

காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் பிரத்தியேகமான பிரச்சினைகள் அல்ல எனவும், தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தேசியப் பிரச்சினையாகும் எனவும் நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மாகாணங்களை விடுத்து, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பல்லின சமூகமாக வாழும், யுத்தத்திற்குப் பின்னரான காணி இழப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மட்டும் இவ்வாறு அதிகாரம் வாய்ந்த விசேட குழுவினை நிறுவுவது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும்.

இன, மத, பிராந்திய பாகுபாடுகளின்றி சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் மிகத் தெளிவாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் , இந்த தனியொரு மாகாண பொறிமுறையானது அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், காணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கவும் 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரசு நிலங்கள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம் (State Lands (Recovery of Possession) Act No. 07 of 1979) அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என இலங்கையில் ஏற்கனவே போதுமான மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட காணிகள் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் தற்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டே, பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸார் ஊடாக தீர்க்க முடியும் எனும் போது, புதிய குழுக்களை எதற்காக என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்து.

தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவைப்படுவது நாட்டிலுள்ள தற்போதைய சட்டங்களினை ஒன்பது மாகாணங்களுக்கும் பாரபட்சமின்றி, சமமாக அமுல்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் (Political Will) மட்டுமேயாகும் எனவும் இலங்கை நீதிக்கான மய்யமானது சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஜூன் 22 அன்று எடுக்கப்பட்ட இந்த அமைச்சரவை முடிவை உடனடியாக நிறுத்தி வைத்து, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொதுமக்கள் ஆலோசனைகளை நடத்துமாறும், சட்டத்தை நாடு முழுவதற்கும் பொதுவானதாக சமத்துவத்தின் அடிப்படையில் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடம் இலங்கை நீதிக்கான மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now