New Updates! Fresh news just arrived.

சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும்: வ...

News

சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

October 22, 2026 2:15 pm
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் மழையுடனான வானிலையானது எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, நாட்டிற்கு அருகில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது படிப்படியாக மேற்கு திசையினை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் மூலமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்யும் சாத்தியமானது காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களமானது எதிர்வுகூறல் பிரிவினுடைய பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றிருந்த எதிர்கால வானிலை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையினை சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயமானது (ITCZ) காணப்படுவதோடு, சில பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்து வருவதோடு, நாளைய தினத்திலும் நாட்டினுடைய அனைத்துப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தினுடைய செல்வாக்கு காரணமாக, ஒக்டோபர் 23 ஆம் திகதி அளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசமொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதினால், அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கமானது எதுவும் இல்லை என்றபோதிலும், காற்று ஓட்டம் இலங்கையினூடாக வீசுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழை நிலைமையானது இந்த மாதம் 27 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்து நீடிக்கும் என்று பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தவிர, வங்காளக் குடாக் கடலினுடைய ஆழ்கடல் பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்த நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளானது உள்ளன.

அத்தோடு, இதன் காரணமாக, எதிர்வருகின்ற நாட்களில் வங்காளக் விரிகுடாக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக பலநாள் மீன்பிடிப் படகுகளினை இயக்குபவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் வரவிருக்கும் வானிலை அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு, செயற்படுமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now