New Updates! Fresh news just arrived.

எந்த சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயா...

News

எந்த சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் - ரஷ்ய தரப்பு அறிவிப்பு

March 27, 2026 12:06 pm
எந்த சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் - ரஷ்ய தரப்பு அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin வலியுறுத்தினார்.

இந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக இங்கு குறிப்பிட்ட ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்திலும்கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழங்கும் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக கலாசார உறவுகளையும், சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதி அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு காரணமாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan, ரஷ்ய வலுசக்தி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் Vladimir Khazov, பெட்ரோலியம் சார்ந்த சேவை வர்த்தக திட்ட அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதித் தலைவர் Sergey Rodin உள்ளிட்ட ரஷ்ய தூதுக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now