New Updates! Fresh news just arrived.

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

News

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

November 16, 2026 5:29 pm
பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, பலங்கொட கஸ்ஸப தேரர், இன்று (16) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருகோணமலை பிரதான நீதவான் ஏ.எஸ்.எஸ். சம்சுதீன் முன்னிலையில் கஸ்ஸப தேரர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, தேரர் தாமாகவே நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

நீதிமன்றத்தில் கஸ்ஸப தேரர் தெரிவித்த கருத்து: "பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தினதும் பௌத்த பிக்குகளினதும் முக்கிய கடமையாகும்.

நான் அதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டு வருவதால், குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை பிரபஞ்ச விதிகளுக்கு அமைய முற்றிலும் நியாயமானது" என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவிர்த்துச் செயற்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான், கஸ்ஸப தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைத்து, மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now