New Updates! Fresh news just arrived.

பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக ...

News

பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!

July 6, 2026 1:49 pm
பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!
மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க பக்தர்களின் நலன் கருதி திறந்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு அனுப்பியுள்ள தனது வேண்டுகோளில்,

மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க தமிழ் பேசும் மக்கள் நீண்டகாலமாக பள்ளங்கண்டல் ஆலயத்தின் மத நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்று வருவதாக ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், தற்போது மன்னார் – பூக்குளம் வழியாக பள்ளங்கண்டல் ஆலயத்தை சென்றடையும் முக்கிய பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொண்டச்சி, முள்ளிக்குளம் உள்ளிட்ட ஆலயத்தை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது மதக் கடமைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு இந்தப் பாதை மிக முக்கியமானதாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாதை மூடப்பட்டுள்ளதால் வயோதிபர்கள், பெண்கள் மற்றும் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பாதையை மீளத் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல தசாப்தங்களாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கி வரும் பள்ளங்கண்டல் ஆலயத்தை நோக்கிச் செல்லும் இந்தப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, அப்பகுதி மக்களின் மத சுதந்திரத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் எனவும் ரிஷாத் பதியுதீன் தனது வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, பிராந்திய மக்களின் மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தடையில்லா அணுகலை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now