New Updates! Fresh news just arrived.

நேபாளத்தில் தொடரும் மீட்புப் பணிகள்: பலி எண்ணிக்கை 734ஆக ...

News

நேபாளத்தில் தொடரும் மீட்புப் பணிகள்: பலி எண்ணிக்கை 734ஆக உயர்வு!

August 30, 2026 1:11 pm
நேபாளத்தில் தொடரும் மீட்புப் பணிகள்: பலி எண்ணிக்கை 734ஆக உயர்வு!
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பேரிடரின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 3,000 பேர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போட்டேகோஷி ஆற்றில் திடீரென பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளில் மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் பல இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் வைத்தியசாலை பிரேத அறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால், அவற்றை பாதுகாப்பாக வைப்பதில் வைத்தியசாலை நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக சில இடங்களில் தற்காலிக பிணவறைகள் அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 3,000க்கும் மேற்பட்டோர் தொடர்பில் தகவல்கள் இல்லாததால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. காணாமல் போனவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட 167 இந்தியர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஐந்தாவது நாளாகவும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேபாள இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்கள் உட்பட 11,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, போட்டேகோஷி ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தின் சுரங்கப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், மேலும் 100க்கும் அதிகமான நீர்மின் திட்டப் பணியாளர்கள் தொடர்பிலும் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்பதற்காக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் சிறப்பு குழுக்களை அனுப்பியுள்ளன.

பேரிடரால் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும் பெருமளவிலான நிதி தேவைப்படும் என நேபாளம் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச உதவியையும் கோரியுள்ளது.

இந்த அனர்த்தம் பனிப்பாறை சரிவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவும் இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நேபாளத்துக்கான சர்வதேச உதவிகளும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்புகள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. சீனாவும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now