New Updates! Fresh news just arrived.

கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: வெளியாகியுள்ள எச்சரிக்கை! -...

News

கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: வெளியாகியுள்ள எச்சரிக்கை!

November 12, 2026 1:37 pm
கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: வெளியாகியுள்ள எச்சரிக்கை!
கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு, மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதான கங்கைகளின் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

நில்வளா கங்கை: அக்குரஸ்ஸ மற்றும் அதனை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகள் சிறிய வெள்ள அபாய நிலையை நெருங்கியுள்ள போதிலும், பெரியளவிலான அதிகரிப்பைக் காட்டவில்லை.

கிங் கங்கை: பத்தேகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை காணப்பட்டாலும், அது பெரிய வெள்ளமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.

களு கங்கை: மாகுரு மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள நிலையை நெருங்கியுள்ளது.

களனி கங்கை: சாதாரண நீர்மட்டம் உயர்வைக் காட்டினாலும், வெள்ள நிலை வரை அதிகரிக்கவில்லை.

அத்தனகலு ஓயா: கம்பஹா, தூனமல மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை காணப்படுகிறது.

மஹா ஓயா: நீர்மட்டத்தில் சாதாரண உயர்வு பதிவாகியுள்ளபோதிலும், வெள்ள அபாயம் இல்லை.

இன்றும் ஊவா, தெற்கு, மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் குறிப்பிடத்தக்க அளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்நிலையின் காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், குறுகிய காலத்தில் பெய்யும் அதிக மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் திடீரென நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது.

எனவே, சிறிய அளவிலான வெள்ள அபாய நிலையில் உள்ள கங்கைகள் மற்றும் ஆறுகளை அண்மித்து வாழும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆறுகளைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாகக் கவனிக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now