New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலிய...

News

அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல்!

October 3, 2026 6:46 am
அட்டாளைச்சேனை  தேசிய  கல்வியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல்!
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய விரிவுரையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விரிவுரையாளர் நேற்றைய தினம் (02) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், மனுதாரர் மற்றும் எதிராளித் தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களைச் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

செய்திப் பின்னணி:

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் குறித்த 55 வயதுடைய நபர், மாணவிகளின் பாடப் பரீட்சைகளுக்கான மதிப்பெண்கள் (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார். இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக அமைதி காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சிக்குக் கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இக் கொடூரச் சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த வியாழக்கிழமை (01) சந்தேகநபரான விரிவுரையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சியின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now