New Updates! Fresh news just arrived.

திருகோணமலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: முன்னாள் இ...

News

திருகோணமலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!

November 8, 2026 9:54 am
திருகோணமலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு:  முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!
திருகோணமலை, உப்புவெளி - கப்பல்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி இரவில் கப்பல்துறை சந்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாடகை முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி கடந்த 6ஆம் திகதி இரவில் திக்வெல்ல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரு சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதியன்று 32 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர்களுக்கும் இந்த முச்சக்கர வண்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதோடு, அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்ட நபர் முன்னாள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, சட்டப்பூர்வமாக விலகியவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now