New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் ஒழிப்பில் சமூகப் பணி அணுகுமுறை அவசியம்: தேசி...

News

போதைப்பொருள் ஒழிப்பில் சமூகப் பணி அணுகுமுறை அவசியம்: தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இணைப்பாளர்!

June 21, 2026 6:24 pm
போதைப்பொருள் ஒழிப்பில் சமூகப் பணி அணுகுமுறை அவசியம்: தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இணைப்பாளர்!
போதைப்பொருள் பாவனையாளர்களினை வெறுமனே ஒரு குற்றவாளியாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபராகவோ பார்ப்பதை விட, அவர்களினுடைய முழுமையான வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு தலையீடுகளினை மேற்கொள்ள வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம்.ரஷாத் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹஸ்ஸான் ஆகிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட சமூகப்பணி தலையீட்டு முயற்சி வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றிய அவர், தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராகச் செயற்படுவதினையும், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் உரையாற்றியதினையும் தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தும் விடயம், அரச சேவைகளின் இறுதிப் பயன் பொதுமக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதோடு, மக்களை தனித்த பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாது, அவர்களது அனைத்து சமூக, பொருளாதார, குடும்ப மற்றும் உளவியல் தேவைகளுடனும் அணுக வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“சமூகப் பணியில் இதனை ‘முழுமையான அணுகுமுறை’ என அழைக்கின்றோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய ஒருவருக்கு போதைப்பொருள் பிரச்சினை மட்டுமல்லாது, பொருளாதார நெருக்கடி, குடும்ப சிக்கல்கள் மற்றும் சமூகத் தடைகள், தொழில் வாய்ப்பு குறைபாடுகள் மற்றும் ஆன்மீக, கல்விசார் பிரச்சினைகளும் இருக்கலாம். எனவே ஒரு பிரச்சினையை மட்டும் தீர்ப்பதன் ஊடாக அவரை முழுமையாக மாற்ற முடியாது. அவரை ஒரு முழுமையான மனிதராகக் கருதி, அவரது அனைத்து தேவைகளினையும் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சேவைகளினை வழங்க வேண்டும்” எனவும் அவர் விளக்கமளித்தார்.

முன்னைய பல அரசாங்கத் திட்டங்களில் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் சமூகப் பணியாளர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை இணைத்து சமூக மற்றும் உளவியல் தலையீடுகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.

மேலும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாக, மக்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பார்வையில் இருந்து பிரச்சினைகளை அணுகும் பண்பை அவர் பாராட்டினார். இம்முறை முன்னெடுக்கப்படுகின்ற திட்டம் ஒரு முன்னோடி (Pilot Project) முயற்சி எனக் குறிப்பிட்ட ரஷாத், அதனுடைய பெறுபேறுகள் மற்றும் அனுபவங்களினையும் முறையாக ஆவணப்படுத்தி, தேசிய மட்டத்தில் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனுடன் தொடர்புபடுத்தி, 2017 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் தாம் முன்னெடுத்த “சந்தோஷமான குடும்பம்” திட்டத்தின் கீழ் 49 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் அதே கருத்தாக்கம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சமூகப் பணி தலையீட்டு முயற்சியும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் தேசியத் திட்டமாக வளர வேண்டும் என எதிர்பார்ப்பை வெளியிட்ட அவர், மாணவர்களினுடைய ஒத்துழைப்போடு அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையையும் குறிப்பிட்டார்.

“பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பிரச்சினைகளற்ற வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் மாற வேண்டும். அவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அரச சேவைகள் மக்களின் காலடிக்கே சென்று சேர வேண்டும். இதுவே எங்களது இறுதி நோக்கம். குறித்த இலக்கை அடைவதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” எனவும் எம்.எம்.ஜி.பி.எம்.ரஷாத் மேலும் சுட்டிக்காட்டினார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now