New Updates! Fresh news just arrived.

கல்முனையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரைய...

News

கல்முனையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

October 26, 2026 2:03 pm
கல்முனையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
சீரற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய பொதுச் சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் மற்றும் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத் ஆகியோர் விளக்கவுரைகளை வழங்கினர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள், அவற்றினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களைத் திறம்பட எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, வானிலை அவதான நிலையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றி, அவசரகாலங்களில் துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்குதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், அவசர நிலைமைகளின்போது பொறுப்புகளைத் தெளிவாகப் பகிர்ந்துகொண்டு செயற்படுதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, வெள்ளம் மற்றும் கனமழையினால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் சவால்கள், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், அனர்த்த காலங்களிலும் அவசர மருத்துவ சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அனர்த்தங்களுக்கு முன்னரான தயார்நிலை, நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் துரிதமான செயற்பாடுகள் ஊடாக மக்களின் உயிர்களையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now