New Updates! Fresh news just arrived.

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான...

News

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்!

September 8, 2026 5:06 pm
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்!
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (08) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாகாண கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now