New Updates! Fresh news just arrived.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் விசேட கலந்...

News

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

July 2, 2026 12:50 pm
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (02.07.2026) காலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

கடந்த ஜூன் 24ஆம் திகதி கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற சுற்றுலா அபிவிருத்தித் திட்டக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான சுற்றுலாத்துறை தொடர்பான 2027ஆம் ஆண்டுக்குரிய திட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுற்றுலாத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறிப்பாக சுற்றுலாப் பணியகத்தின் ஊடாக நேரடியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐந்து விசேட திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கூடுதல் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அமைச்சின் சார்பில் இக்கலந்துரையாடலில் பங்கேற்ற திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எச்.பி.சோமதிலக, 50 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட திட்டங்களின் திட்ட வடிவமானது கட்டாயமாகத் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் நியமங்களுக்கு அமைவாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முன்மொழியப்படும் அனைத்துத் சுற்றுலாத் திட்டங்களும் துறைசார் சுற்றுலா உபகுழுவிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now