New Updates! Fresh news just arrived.

கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவட...

News

கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை: வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களைக் கண்காணிக்கத் தீர்மானம்!

July 2, 2026 8:57 pm
கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை: வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களைக் கண்காணிக்கத் தீர்மானம்!
கல்முனை பிராந்தியத்தின் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தினை, பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர் கே.ஏ.ஹமீட் உள்ளிட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, கல்முனை பிராந்தியத்தில் பதிவாகியுள்ள தற்போதைய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, அதிக ஆபத்து நிலவும் பகுதிகள், டெங்கு நுளம்பு பெருக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர் கே.ஏ.ஹமீட் இந்தக் கூட்டத்தின் போது தன்னால் மேற்கொள்ளப்பட்ட பூச்சியல் ஆய்வு பற்றிய விபரங்களை விளக்கக் காட்சிகளுடன் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிய தீவிர சோதனைகளை மேற்கொள்ளல், டெங்கு பரவல், அதிக ஆபத்து காணப்படும் பகுதிகளில் களப்பணிகளைத் தீவிரப்படுத்தல், வீட்டு உட்புறச் சூழலில் டெங்கு நுளம்பு பெருகுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், வீடுகளில் திடீர் சோதனைகளை முன்னெடுத்தல், டெங்கு அபாயம் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், கல்முனை பிராந்தியத்தில் இதன் தாக்கம் ஏற்படாத வகையில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை சுகாதாரத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now