New Updates! Fresh news just arrived.

இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குரல் உ...

News

இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குரல் உயர்த்தினர்: சீர்திருத்தம் கோரி ஊடகவியலாளர் சந்திப்பு!

May 1, 2026 2:26 pm
இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா  பட்டதாரிகள் குரல் உயர்த்தினர்:  சீர்திருத்தம் கோரி ஊடகவியலாளர் சந்திப்பு!
மே தினத்தினை முன்னிட்டு, இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகள் தங்களது தொழிற்சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கல்முனையில் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நீண்டகாலமாக நிலவி வருகின்ற தொழில்முறை அங்கீகாரக் குறைபாடு, சம்பள அநீதி மற்றும் சேவை அமைப்பில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தீவிர கவலை வெளியிடப்பட்டது.

குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், கணக்கியல் துறையில் பணியாற்ற தேவையான முழுமையான தகுதிகள் இருந்தபோதிலும், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் அரசுத் துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் பின்தள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார்கள். குறிப்பாக, பட்டப்படிப்பு தகுதியோடு இணையான நிலை வழங்கப்படாதது காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சங்கங்களினுடைய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளினை இதுவரைக்கும் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டதுடன், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கான தனித்த சேவை அமைப்பினை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, சம்பள கட்டமைப்பில் நிலவும் வேறுபாடுகளும் குறித்த சந்திப்பில் முக்கியமாக முன்வைக்கப்பட்டதுடன், ஒரே பணியினை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு தகுதியாளர்களுடன் ஒப்பிடும்போது உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குறைந்த சம்பளத்தினை பெறுகின்றனர் என்பதோடு, சேவை அனுபவம் அதிகரித்தாலும் அதற்கேற்ற சம்பள உயர்வுகளானது கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்கால தேவைகள் குறித்து பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா தகுதியினை பட்டப்படிப்பிற்கு இணையானதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல், தனித்த சேவைப் பிரிவினை உடனடியாக அமுல்படுத்தல் மற்றும் சமச்சீர் சம்பள கட்டமைப்பினை உறுதி செய்தல், பதவி உயர்வுகளில் சம வாய்ப்புகளினை வழங்குதல் மற்றும் மேலதிக கல்வி மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகளினை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன.

இதேவேளை, அரசுக்கு மூன்று ஆண்டுகள் காலம் கொடுத்துள்ளோம். எங்களினுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடந்த காலத்தில் போராடியது போல போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளன.

இதன்போது மறைந்த ஊடகவியலாளரான ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு மௌன பிரார்த்தனையும் செய்யப்பட்டதோடு, குறித்த தொழில் சங்க வளர்ச்சியில் பங்காற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கே.கோபாலசிங்கம், ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோருக்கு பொன்னாடை போத்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மே தினத்தின் பின்னணியில் வெளிப்பட்ட குறித்த கோரிக்கைகள், நாட்டின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் கல்வித் தகுதிகளின் மதிப்பீடு தொடர்பில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now