New Updates! Fresh news just arrived.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சே...

News

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்!

September 24, 2026 3:03 pm
பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்!
குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சில சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால், அவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை பாதுகாப்பாக இணைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பதிவாளர் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி, பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையிலும் சிறுவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நீண்டகாலமாக பாடசாலையை விட்டு விலகியிருந்த சில சிறுவர்கள், குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களின் கல்வி இடைவெளியை குறைப்பதற்காக விசேட கல்வித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு தடவை, அங்கு தங்கியுள்ள ஒவ்வொரு சிறுவருக்கும் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக்கொள்ளும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதேச சுகாதார அதிகாரிகள் ஊடாக குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களை கண்காணித்து, அங்கு உள்ள ஒவ்வொரு சிறுவரின் சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களை அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரு துறைகளிலும் சிறுவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now