New Updates! Fresh news just arrived.

தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பட்டம் வழங்கப்பட்டதாக மாணவ...

News

தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பட்டம் வழங்கப்பட்டதாக மாணவர் வழக்கு

August 11, 2026 7:51 am
தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பட்டம் வழங்கப்பட்டதாக மாணவர் வழக்கு
கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் டிப்ளோமா கற்கைநெறியைத் தொடர்ந்த மாணவர் ஒருவர், இறுதிப் பரீட்சையில் தாம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு பட்டம் வழங்கப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவர் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாம் இறுதிப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதற்கு பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என மாணவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். குறித்த விரிவுரையாளர், மற்றுமொரு மாணவர் ஊடாக தம்மிடம் 80,000 ரூபாய் பணம் கோரியதாகவும், அதனை வழங்க தாம் மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் திட்டமிட்ட வகையில் பரீட்சையில் தோல்வியடையச் செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், பின்னர் மீண்டும் பரீட்சை நடத்தப்படாத நிலையில், முன்னதாக தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இறுதிப் பரீட்சையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பட்டமளிப்பு நிகழ்வு நடத்தப்பட்டதாக மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மீண்டும் எந்தவொரு பரீட்சையும் இடம்பெறாத நிலையில், முன்னதாக தோல்வியடைந்த மாணவர்கள் எவ்வாறு சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாகவும், இதுவரை அதற்கான திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னணியில் பரீட்சை நடைமுறையில் முறைகேடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் மனுதாரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் கீழ் 2022/2023 கல்வியாண்டில் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளோமா கற்கைநெறியில் மனுதாரர் கல்வி பயின்றுள்ளார்.

சட்டத்தரணி தனோஷா பெரேரா ஊடாக மாணவர் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now