New Updates! Fresh news just arrived.

இளங்கலைஞர் விருதுக்கான விண்ணப்பத்திற்குப் பின்னரும் தொடரு...

News

இளங்கலைஞர் விருதுக்கான விண்ணப்பத்திற்குப் பின்னரும் தொடரும் சுமைய்யா ஜெஸ்மியின் வெற்றிகள்!

November 4, 2026 4:56 am
இளங்கலைஞர் விருதுக்கான விண்ணப்பத்திற்குப் பின்னரும் தொடரும் சுமைய்யா ஜெஸ்மியின் வெற்றிகள்!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துறைக்கான இளங்கலைஞர் விருது மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதேசம் முதல் சர்வதேசம் வரையிலான பல்வேறு மட்டங்களில் இலக்கியப் போட்டிகளில் இவர் பெற்றுவரும் தொடர் வெற்றிகள்,தொடர்ச்சியான கலை இலக்கியச் செயற்பாடுகள் மற்றும் பிரதேச, மாவட்ட, மாகாண, கலாசார உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தல்கள், நற்சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவர் இவ்விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நூல் வெளியீட்டை மட்டுமே ஓர் எழுத்தாளரின் இலக்கியத் தகுதிக்கான அளவுகோலாகக் கருத முடியாது என்பதற்கு இவரது இலக்கியப் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவர்
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாட்டாரியல் ஆய்வுக் கட்டுரை, நாடகம், சிறுவர் பாடல், பாடலாக்கம், திரைப்பட விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிலக்கியத் துறைகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று, போட்டிகள் தோறும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்று வருவது அனைவரும் அறிந்ததே!

அதேவேளை, கல்முனைப் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவுடன் இணைந்து நீண்ட காலமாகக் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன், கவியரங்குகள்,இலக்கிய நிகழ்வுகள், விவாத மேடைகள், அறிவிப்பாளர் பயிற்சிகள், பாடல் மற்றும் நாடகப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

மேலும், இலக்கியப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுதல், மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல், இளம் தலைமுறையினரின் கலை, இலக்கியத் திறன்களையும் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து வளர்த்தல் எனப் பன்முகத் தளங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

மாகாணத்தின்
இளங்கலைஞர் விருதைப் பெறுவதற்கு முன்னரே கல்முனைப் பிரதேச செயலகத்தினால் பிரதேசத்தின் சிறந்த எழுத்தாளராக 'கலைஞர் சுவதம் – 2024' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். மேலும், சிலோன் மீடியா போரத்தின் 'சிறந்த பெண் ஆளுமை – 2024' விருதையும் பெற்றுள்ளார்.

இவரது இலக்கியப் போட்டி வெற்றிகள் சர்வதேசம், தேசியம், மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேசம் எனப் பல்வேறு மட்டங்களில் விரிந்துள்ளன.

இவ்விருதுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னரும் இவரது இலக்கியப் பயணம் பல புதிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் எழுத்தாளர் சங்கமம் (Writers Café) நடத்திய 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம், தனூஷ்கோடி ராமசாமி நினைவு சர்வதேச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம் என்பவற்றோடு, தினச்சுடர் பத்திரிகையின் 2026 இற்கான விருது வழங்கல் நிகழ்வில் 'பன்முக ஆளுமை' க்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். அத்துடன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கியப் போட்டிகளில் சிறுகதையில் முதலிடமும், திரைப்பட விமர்சனத்தில் இரண்டாம் இடமும், மரபுக்கவிதையில் மூன்றாம் இடமும் இவருக்கு கிடைத்துள்ளது.

இவ்வெற்றிகள் எதுவும் இளங்கலைஞர் விருதுக்கான மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பரிசுபெற்ற சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியிலும் இவர்‌ தற்போது ஈடுபட்டு‌ வருகிறாா்.

ஒரு படைப்பாளியின் இலக்கியத் தகுதி அவர் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கையால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. அவரது படைப்புகளின் தரம், தொடர்ச்சியான இலக்கிய ஈடுபாடு, போட்டிகளில் பெற்ற வெற்றிகள், சமூகத்திற்கான கலை இலக்கியப் பங்களிப்பு என்பவற்றோடு, சம்பந்தப்பட்ட துறையினரின் மதிப்பீடுகளும் அதனைத் தீர்மானிக்கின்றன.

அந்த வகையில், நூல் வெளியீட்டுக்கு முன்னரே தனது படைப்பாற்றலாலும் தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகளாலும் அங்கீகாரம் பெற்றுள்ள சுமைய்யா‌ ஜெஸ்மி‌ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இளங்கலைஞர் விருது அவரது இலக்கியப் பயணத்திற்குக் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க‌ தகுதியான மாகாண அங்கீகாரம் எனலாம்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now