New Updates! Fresh news just arrived.

சுதுமலை அம்மன் கோவில் வழக்கைத் தள்ளுபடி செய்து மேல் நீதிம...

News

சுதுமலை அம்மன் கோவில் வழக்கைத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்றம் உத்தரவு!

August 1, 2026 4:12 pm
சுதுமலை அம்மன் கோவில் வழக்கைத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்றையதினம் (31) வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்களினை உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமெனவும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாது என இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகி இருந்தார்.

நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையினுடைய தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், கட்டுமான அனுமதி குறித்தான வழக்குகளினை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது எனவும், அதனை மேல் நீதிமன்றமானது பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும் கூட அவற்றினை இடித்தளிக்குமாறு கட்டளை இடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்வும், ஆனால் குறித்த வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரால் செய்யப்பட்ட குறித்த விண்ணப்பம் முன்முதிர்வானது எனவும் வாதிட்டார்.

எனவே, இடைக்காலக் கட்டளைகளினை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களினால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதினையும் கருத்திற்கொண்டு;, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களினை முன்வைத்தார்.

மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களினை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களினுடைய இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தினை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now