New Updates! Fresh news just arrived.

பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின...

News

பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தல்!

September 10, 2026 8:33 pm
பயணச் சீட்டுகளை வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தல்!
சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.

குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் நான்கு தடவைகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்டமையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்தின் அனுமதிப்பத்திரம் 2026 செப்ரெம்பர் 10ஆம் திகதி முதல் 2026 ஒக்ரோபர் 9ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பானதும் நம்பகமானதுமான சேவையை உறுதி செய்வதற்காக அதிகார சபையால் கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இவ்வாறான முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமின்றி முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now