New Updates! Fresh news just arrived.

ஒலுவில் துறைமுகம் தொடர்பில் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் மீது சு...

News

ஒலுவில் துறைமுகம் தொடர்பில் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வரலாற்று உண்மைகளுக்கு முரணானவை: முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

May 25, 2026 9:40 pm
ஒலுவில் துறைமுகம் தொடர்பில் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வரலாற்று உண்மைகளுக்கு முரணானவை: முன்னாள் இராஜாங்க அமைச்சர்!
ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடலரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் “இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆனதால் விஞ்ஞான ஆய்வு இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” எனக் கருத்து வெளியிட்டிருந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைப்பது குறித்து சிந்தித்திருந்தாலும், அது விஞ்ஞான ரீதியாக சாத்தியமானதா, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா, எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பன தொடர்பில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

ஒலுவில் துறைமுகம் தொடர்பான ஆரம்பகட்ட சாத்தியவள அறிக்கை சாதகமாக அமையாத காரணத்தால், துறைமுகத்திற்கான அலைத்தடுப்பு அணை (Breakwater) உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்பு பணிகளையும் அவர் ஆரம்பிக்கவில்லை. அதற்கு பதிலாக, பிராந்திய இளைஞர், யுவதிகளின் தொழில்நுட்ப கல்வி முன்னேற்றத்திற்காக துறைமுக அதிகார சபையின் மஹாபொல தொழில்நுட்ப கல்லூரி, ஒலுவில் வெளிச்சவீடு மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்கான விடுதி போன்றவற்றை உருவாக்கும் பணிகளையே முன்னெடுத்தார்.

அவரோடு நெருக்கமாக பணியாற்றியவர்களும், ஒலுவில் பிரதேசத்தின் புத்திஜீவிகளும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனை நன்கு அறிவார்கள். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த ஆரம்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வரலாற்று உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் விரும்பியிருந்தால் துறைமுக அதிகார சபையின் நிதியை பயன்படுத்தி திட்டத்தை ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல், திருகோணமலையில் “அஷ்ரப் டெர்மினல்” என அழைக்கப்படும் புதிய Terminal ஒன்றை பல பில்லியன் ரூபாய் செலவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுகத் திட்டமானது உண்மையில் 2008 ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய தலைமையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இன்று உருவாகியுள்ள கடலரிப்பு பிரச்சினைகளுக்கான பொறுப்பை மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மீது சுமத்துவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானதாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப் அவர்களைப் பற்றி உயர்ந்த மதிப்புடன் பேசியதையும், குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் முறையில் 12 வீத வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக குறைத்ததில் அஷ்ரப் அவர்களின் பங்களிப்பை பாராட்டியதையும் ஹரீஸ் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் அஷ்ரப் தொடர்பான பல தகவல்களை கேட்டறிந்ததோடு, பொதுக்கூட்டங்களிலும் அவரது அரசியல் தொலைநோக்கும் சமூகப்பணிகளும் குறித்து பாராட்டி பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஒருவர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டமை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமை, அபிவிருத்தி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பணியாற்றிய வரலாற்றுத் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ள ஹரீஸ், அவர்மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டிய பொறுப்பு அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now