New Updates! Fresh news just arrived.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா ...

News

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா கோலாகலம்!

February 6, 2026 10:12 pm
இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா கோலாகலம்!
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்து முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஐம்பெரும் விழா இன்று (06) மிகச் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை நினைவுகூரும் நினைவுக்கல் திரை நீக்கம், PSDG நிதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் கையளிப்பு, புதிய சிற்றுண்டி சாலை திறப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் விடுகை விழா, கடந்த ஆண்டு பரீட்சையில் சாதித்த மாணவர்களை கௌரவித்தல், நினைவுமலர் வெளியீடு மற்றும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியவை இவ்விழாவின் பிரதான அம்சங்களாக அமைந்தன.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை கல்வி வலய பணிப்பாளரான எம்.எஸ். சஹதுல் நஜீம் குடும்ப சகிதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக, க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்விப் பயணம், சாதனைகள் மற்றும் நினைவுகளைச் சுமந்த நினைவுமலர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைக்கான ஊக்குவிப்பு உரைகளும் வழங்கப்பட்டன.
கல்முனை கல்வி வலய மேம்பாட்டிலும், பாடசாலை வளர்ச்சியிலும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிய கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினாலும், இஸ்லாமாபாத் மக்களாலும் அமோக பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

அதேபோன்று, பிராந்திய ஊடகத்துறையில் நீண்ட காலமாகச் சேவையாற்றி வருவதோடு, பாடசாலை மேம்பாட்டிலும் அக்கறை செலுத்தி வரும், அண்மையில் உபாலி விஜேவர்தன சிறப்பு தேசிய விருது பெற்ற அல்-மீஸான் பௌண்டஷன் தவிஷாளரும் ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் கல்வி சமூகத்தினால் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், கல்வி, ஒழுக்கம் மற்றும் பாடசாலைச் சேவைகளில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு மாணவர்களின் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இவ்விழாவில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி ஆரிக்கா காரியப்பர், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் ஏ. சித்தி ரிஹானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும், பாடசாலை பிரதி அதிபர், பிரிவு தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், இஸ்லாமாபாத் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், இஸ்லாமாபாத் ஜனாசா நலன்புரி அமைப்பு, யங் மௌன்ட் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now