New Updates! Fresh news just arrived.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளினை இழுத்தடிக்கின்றது...

News

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளினை இழுத்தடிக்கின்றது: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்!

June 4, 2026 2:24 pm
அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளினை இழுத்தடிக்கின்றது: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்!
மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்கின்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் நாங்களும் குறித்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினுடைய முன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் குறித்து நேற்று புதன்கிழமை(03) இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய நிலையில், செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்;

எமது நாட்டில் கடந்த காலங்களில் மாகாண சபை அதிகாரங்களானது பயன்படுத்தப்பட்டிருந்தது.அண்மைக்காலங்களில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த மாகாண சபை முறைமை இன்றும் கூட இழுபறியாக காணப்படுகின்றது.தற்போது எமது கட்சியின் சார்பாக சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்டோர் மாகாண சபை குறித்து அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்கள்.ஆகவே தான் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்னும் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.

இந்நாட்டின் தலைவர் ஊழலற்ற நிர்வாகத்தினை நடாத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் சில முன்னெடுப்புக்களினை மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் நாங்களும் குறித்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் குறித்த மாகாண சபைக்கு இருந்த அதிகாரங்களினை கட்டம் கட்டமாக குறைத்து இந்த மாகாண சபை முறைமையினை இல்லாமல் செய்ய வேண்டும் என்னும் அடிப்படையை கையாண்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த அரசாங்கமானது மக்களுக்கு தேர்தல் காலங்களின் போது பல்வேறு வாக்குறுதிகளினை வழங்கியிருந்தது. இதில் ஆட்சி அதிகாரங்களினை கையாள்கின்ற போது மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்கின்ற வாக்குறுதிகளினை வழங்கி இருந்தார்கள். ஆனால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்தோடு, இவ் அரசாங்கம் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளினை ஏதோ இழுத்தடிக்கின்ற நடைமுறைகளினை தான் கொண்டிருக்கின்றது. எதிர்காலங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மை மக்களின் மனங்களினை வெல்லக் கூடியதாக எதிர்வரும் காலங்களில் அவரது நடவடிக்கை அமைய வேண்டும். மாகாண சபை மாத்திரமன்றி இன ரீதியிலான பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வை பெற்று தர வேண்டும்.

அவ்வாறு அவர் செயற்படும் போது தான் இந்நாட்டில் சிறுபான்மையினராகவுள்ள மக்கள் மீண்டும் ஒரு ஜனநாயக ரீதியான ஒரு ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் மீண்டும் அவர் ஜனாதிபதியாக அம்மக்களினால் தெரிவு செய்யப்பட்டு இந்த நாட்டினுடைய நீண்ட கால அரசியலை முன்னெடுப்பதற்கு உதவியாக அவர் இருப்பார் எனவும் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now