New Updates! Fresh news just arrived.

பல்கலைக்கழக பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி, விரிவுரையாளர்க...

News

பல்கலைக்கழக பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி, விரிவுரையாளர்கள் நாளை போராட்டம்

September 1, 2026 11:12 pm
பல்கலைக்கழக பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி, விரிவுரையாளர்கள் நாளை போராட்டம்
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக நாளை (02 ) போராட்டம் ஒன்றை நடாத்த தயாரராக இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

நாளை (02)ஆம் திகதி மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

மேலும் இதற்கு தீர்வு காணத் தவறும் பட்சத்தில், மேலும் வரும் வாரத்தில் இப்போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமாக, அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடியதாகவும், அதற்கான யோசனைத் திட்ட மொன்றை அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

எனினும், அந்த யோசனைகளையோ அல்லது கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடனும் பிரதமரிடமும் கலந்துரையாடியதாகக் கூறிய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசாங்க பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமும் அறியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

என்றாலும், இதுவரை அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்திருந்த அவர், தற்போது பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பல விரிவுரையாளர்கள் தங்களது சேவைகளை விட்டு விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டளவில் அரசாங்க பல்கலைக்கழக அமைப்பிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்களை சேர்த்துக்கொண்டுள்ளதாகவும், தற்போது அது ஒரு வருடத்திற்கு 45,000 மாணவர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், 2015இல் அரசாங்கப் பல்கலைக்கழக அமைப்பில் 5,800 விரிவுரையாளர்கள் இருந்த போதிலும், தற்போது அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களை விட்டு விலகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிககையில் ,

"கடந்த சில வருடங்களில் அதிகளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அதனால் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்காத சூழ்நிலையே காணப்படுகிறது. அரசாங்கப் பல்கலைக்கழக அமைப்பு சீர்குலைவது என்பது இந்நாட்டின் எதிர்காலமே சீர்குலைவதாகும். ஆதலால் அரசாங்கத்திடம் நாங்கள் முன்வைப்பது என்னவென்றால், இதனைக் காது கொடுத்துக் கேட்க முடியாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். என்றாலும் நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இது குறித்துக் கலந்துரையாடியுள்ளோம். என்றாலும் தீர்வு இல்லாத நிலையிலேயே நாளை (02) மதிய உணவு வேளையில் அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம். அதனால், அரசாங்கம் இதற்குத் தீர்வு தரும் வரை இந்தப் போராட்டத்தை தடையின்றித் தொடர நாங்கள் தீர்மானித்துள்ளோம்." என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now