New Updates! Fresh news just arrived.

ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது!

News

ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது!

October 6, 2026 1:35 pm
ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது!
அம்பாறை பொலிஸ் தலைமையகத்தினுடைய ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர - தயாபுர கிராமத்தில் வைத்து குறித்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் போதைப்பொருளோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'கல்ஹாரா' என்றழைக்கப்படும் 'டின் மல்லி' என்பவரின் சொந்தச் சகோதரர் எனப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முவங்கல மற்றும் கல்மடுவ பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த பிறிதொரு சந்தேகநபரிடம் பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறைப் பிரிவுச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலின் கீழும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறைப் பொலிஸ் தலைமையகத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையிலும் இச்சோதனை நடவடிக்கை திட்டமிட்டு நடத்தப்பட்டது.

அம்பாறைத் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாந்த குமார தலைமையிலான பொலிஸ் கொன்ஸ்டபிள்களான நந்தன (15991), ஜெயசிறி (43151), சோமரத்ன (66475) மற்றும் குணவர்தன (73734) ஆகியோரைக் கொண்ட விசேட பொலிஸ் குழுவினரே இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் எல்லைக்குள் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகப் பொலிஸார் எடுத்து வரும் இத்தகைய திட்டமிட்ட அதிரடி நடவடிக்கைகள் போதைப்பொருள் வலையமைப்பின் முதுகெலும்பை உடைப்பதாக அமைந்துள்ளதுடன், பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now