New Updates! Fresh news just arrived.

நக்கிள்ஸ் குகையில் சிறுமி குழந்தையுடன் மீட்கப்பட்ட சம்பவம...

News

நக்கிள்ஸ் குகையில் சிறுமி குழந்தையுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

November 15, 2026 1:03 pm
நக்கிள்ஸ் குகையில் சிறுமி குழந்தையுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!
நக்கிள்ஸ் மலைத் தொடர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் பச்சிளம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்க தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தலையீடுகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் செயற்படுத்துமாறு தொடர்புடைய பிரிவுகளுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நக்கிள்ஸ் பிரதேசத்திலிருந்து பதிவான, 15 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பாதுகாப்பற்ற பிரசவத்தின் பின்னர் குழந்தையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், ஒரு தாயாக தனக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக கருதவில்லை எனவும், தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக குழந்தைகள் வெவ்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வழிகளிலும் பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆளாகிறார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

அதுமாத்திரமன்றி, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர உறவும் தொடர்பாடலும் கிரமமாக நழுவிச் செல்வதும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமான முக்கிய காரணியாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவர்களின் மிக நெருக்கமான சூழலிலேயே அவர்கள் பாதுகாப்பற்ற தன்மைக்குள்ளாகும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

எந்தச் சூழ்நிலையிலும், "எங்கள் பெற்றோரிடம் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்ற உறுதியான நம்பிக்கையைச் பிள்ளைகளிடம் கட்டியெழுப்பப் பெற்றோராக அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடும்பத்தினுள் அத்தகைய பாதுகாப்பான சூழலையும் திறந்த உரையாடலையும் உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற ஆபத்தான மற்றும் மனவேதனை தரும் சம்பவங்கள் ஏற்படுவதைப் பெரும் அளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இத்தகைய சூழ்நிலைகளில் ஆபத்துக்குள்ளானவர்கள் அல்லது பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆளானவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படும் மற்றும் தலையீடு செய்யும் அனைத்துத் தரப்பினரும், அரச நிறுவனங்களும் மக்களுடன் மிகவும் நெருக்கமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக மாற வேண்டும் என்ற செய்தியையும் இச்சம்பவம் வழங்குவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவிக்கிறார்.

இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் குறித்து நீண்டகால அடிப்படையில் கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற தன்மைக்குள்ளாகும் குழந்தைகளுக்காக முறையான தீர்வாக 2027 ஆம் ஆண்டு முதல் புதிய "மாற்றுப் பாதுகாப்புக்கொள்கையை" செயற்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கான அவசியமான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்பதால், நாட்டின் குழந்தைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமாகவும் கவனமாகவும் செயற்படுமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now