New Updates! Fresh news just arrived.

தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்!...

News

தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்!

April 5, 2026 5:08 pm
தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்!
நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்காகவும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சிறு அளவிலான வியாபாரிகள் எவ்வித மேலதிக செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் அடையும் வகையில் தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையை நாணயத்தாள்கள் மற்றும் சில்லறைக்காசுகளின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

தற்போது இலங்கையில் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படுவதுடன், வயது வந்தோரில் 89 சதவீதமானோர் வங்கி வசதிகளைக் கொண்டுள்ளனர்.

ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் CEFTS கட்டமைப்பும், 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் LankaQR கட்டமைப்பும் தற்போது செயற்பாட்டில் உள்ளன.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதுடன், 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை LankaQR ஊடாக மாதமொன்றுக்கு சுமார் 395,000 ரூபாய் பெறுமதியான மிகக் குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளே இடம்பெற்றுள்ளன.

இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக நாளை ஆரம்பமாகும் திட்டத்தின் கீழ் விசேட உத்திகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், QR பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட குலுக்கல் திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றி பெறுவோருக்கு 1,000,000 ரூபாய் வரையான பெறுமதிமிக்க பரிசில்களை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய மட்டத்திலான பிரசார நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட "சமூகப் புலப்பாட்டுச் சுட்டெண்" (Social Visibility Index) மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெறுமனே ஒரு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கையை எடுப்பது மாத்திரமன்றி, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகும்.

வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட டிஜிட்டல் கொடுப்பனவு பழக்கத்தை ஏற்படுத்தி, எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now