New Updates! Fresh news just arrived.

கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியத...

News

கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது

July 4, 2026 2:35 pm
கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது ஒட்டுமொத்த நோயாளர்களின் சதவீத எண்ணிக்கையின் அடிப்படையில் 20.43% ஆகும்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 58,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 39 ஆகவும் உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 2,604 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரமே 3,422 நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த 7 மாத காலப்பகுதியில் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,547 ஆகும்.

இதற்கும் மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு மாகாண மட்டத்தில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் 52.50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 30,876 ஆகும்.

அதேநேரம், தென் மாகாணத்தில் 9,316 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,129 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 4,542 நோயாளர்களும் பதிவாகியுள்ளதோடு,
மாவட்ட மட்டத்தை பார்க்கும் போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களே மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,740 நோயாளர்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் 3,575 பேரும், இரத்தினபுரியில் 3,530 பேரும், காலியில் 3,364 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4,262 பேரும், களுத்துறையில் 3,955 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 35 ஆகும்.

தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவும் அதிக அவதானம் மிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 142
அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நிலவும் இந்த அதிபயங்கரமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சூழலை சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now