New Updates! Fresh news just arrived.

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகளை தய...

News

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகளை தயாரித்த நபர் கைது!

November 13, 2026 11:56 am
போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகளை தயாரித்த நபர் கைது!
நாரஹேன்பிட்டி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து, சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த நபரொருவர் நுகேகொடை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் வசமிருந்த போலியாகத் தயாரிக்கப்பட்ட 12 சாரதி அனுமதிப்பத்திரங்கள், 08 தேசிய அடையாள அட்டைகள், 08 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 04 வாகனப் பதிவுச் சான்றிதழ்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கடமையில் ஈடுபட்டிருந்தபோது, வெலிக்கடை பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான நபரொருவரைச் சோதனையிட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர் வசமிருந்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் நபரிடமிருந்து 4,000 ரூபா பணத்திற்கு அதனைக் கொள்வனவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இச்சம்பவம் குறித்த தகவல்களைக் கண்டறிய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, சந்தேகநபரின் வழிகாட்டலின் கீழ் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, அவ்வீட்டிலிருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் வசமிருந்த போலியாகத் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களின் தொகுதியை மீட்க முடிந்ததாகக் பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த ஆவணங்களைத் தயாரித்து, அங்கு வரும் நபர்களின் தேவைக்கேற்ப 7,500 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட விலைகளுக்கு விற்பனை செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த 32 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now