New Updates! Fresh news just arrived.

யாழில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்ப...

News

யாழில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிய பிரதமர்!

August 22, 2026 8:53 pm
யாழில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிய பிரதமர்!
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.

இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (68), வவுனியாப் பல்கலைக்கழகம் (07) மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் (01) ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தமாக 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஆடம்பரமான கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு மிகவும் எளிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 7 மாணவர்கள் மற்றும் செயற்கை அவயவங்களைப் பயன்படுத்தும் ஏனைய மாணவர்களும் பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கி வைத்து, உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் வெற்றிகொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ள நீங்கள் அனைவரும் விசேடமானவர்கள். உங்களின் துணிச்சலுக்கும் சளைக்காத ஆற்றலுக்கும் வலுவூட்டும் வகையிலேயே ஜனாதிபதி நிதியத்தினூடாக இந்த உதவிக் கரங்களை நீட்டியுள்ளோம். நீங்கள் ஏனைய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது யுத்தத்தினால் ஏற்பட்ட கவலைக்குரிய விடயமாகும். மீண்டும் ஒருமுறை இவ்வாறானதொரு யுத்தம் ஏற்படாத வகையில், அதற்கான காரணிகளை இல்லாதொழிக்கும் பொறுப்புள்ள அரசாங்கமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்து வருகின்றோம்.

மக்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருந்த ஜனாதிபதி நிதியத்தை, மக்களுக்கான நெருக்கமான நிலைக்குக் கொண்டுவந்து தேவையானவர்களுக்கு உதவி செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் முன்னெடுத்துள்ளார்.

இது சலுகைகளினை அனுபவிப்பவர்களுக்கானது என்னும் வரலாற்றை மாற்றி, உண்மையான தேவை உள்ளவர்களுக்காக குறித்த நிதியம் இன்று செயற்பாட்டு ரீதியில் இயங்குகின்றது.

கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, முன்பள்ளி முதல் மேற்படிப்பு வரை ஜனாதிபதி நிதியத்தினூடாகப் பெரும் உதவிகளைச் செய்து வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்குச் சமத்துவமான நிலை கிடைப்பதும், அது சமூகத்தின் கருத்தாக நிலைநிறுத்தப்படுவதும் மிக முக்கியமாகும். உங்களினை இந்நிலைக்கு உயர்த்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது நன்றிகள் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now