New Updates! Fresh news just arrived.

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள மூன்று ...

News

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள மூன்று மாத கால அவகாசம்!

May 9, 2026 2:03 pm
கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள மூன்று மாத கால அவகாசம்!
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மய்யம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பல்வேறு வீதிகள் தோண்டப்பட்டுள்ள போதிலும், பணிகள் நிறைவடைந்த பின்பு அவை முறையாக மறுசீரமைக்கப்படாமையால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று (08) வெள்ளிக்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜுட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், குடிநீர் இணைப்புகளுக்காக வெட்டப்பட்டிருந்த இடங்களில் இதுவரை சுமார் 300 வீதி பகுதிகள் முழுமையாகப் புனரமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், எஞ்சியுள்ள வீதிப் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக மாநகர சபை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதி, மீதமுள்ள அனைத்து வீதிப் புனரமைப்புப் பணிகளையும் நிறைவு செய்ய 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விண்ணப்பதாரர் சார்பில் இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோர் முன்னிலையாகினர்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை சார்பில் சட்டத்தரணி சப்ரின் சலாஹுதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை யாகியிருந்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now