New Updates! Fresh news just arrived.

வாழ்வாதாரத்தை அழிக்கும் அபிவிருத்தி தேவையில்லை: கிராஞ்சி...

News

வாழ்வாதாரத்தை அழிக்கும் அபிவிருத்தி தேவையில்லை: கிராஞ்சியில் மாபெரும் போராட்டம் அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கை!

May 27, 2026 4:00 pm
வாழ்வாதாரத்தை அழிக்கும் அபிவிருத்தி தேவையில்லை:  கிராஞ்சியில் மாபெரும் போராட்டம் அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கை!
பூநகரி-கிராஞ்சியில் மக்களுடைய வாழ்வாதாரத்தினை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக நாளை (28) வியாழக்கிழமை கிராம மக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடத்தவுள்ளனர்.

இதன்படி, குறித்த போராட்டம் தொடர்பில் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு ஒன்றுபட்ட மக்கள் அமைப்பினுடைய பிரதிநிதி ஜெயச்சித்ரா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள்ளால் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலை திட்டம் போன்றவற்றினை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

இவ்வாறான திட்டங்களால் மக்கள் வெகுவாக பாதிப்படையும் நிலையில் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தினையும், குடியேற்றத்தினையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும், ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8000 தென்னம்பிள்ளைகளினை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.

கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளினை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள்.அவ்வாறு 2000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளினை வாழ்வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றினை அழித்து இவ்வாறான ஒரு அபிவிருத்தியினை கொண்டு வருவதினை மக்கள் ஏற்கமாட்டோம்.
மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அண்மையில் கடற்தொழில் அமைச்சர் கிராஞ்சி ஊடாக சென்றபோது கிராம மக்கள் 50 பேர் கூடி அவரை வழிமறித்து எமது பிரச்சனைகள் குறித்து எடுத்துக்காட்டி இருந்தோம். இருந்தபோதும் அமைச்சரால் அதற்கு சாதகமான பதில் எதுவும்தெரிவிக்கப்படவில்லை. எமக்கான மரியாதையைக் கூட அமைச்சர் குறித்த நேரத்தில் தரவில்லை. நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் வாகனத்திலிருந்தவாறே பதிலளித்துவிட்டு கடந்து சென்றார். ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்துகொள்வதினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, இவ்வாறான செயல்பாடுகளினையும், எமது கிராமத்தினுடைய வளத்தினையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாக நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை கிராமத்தில் முன்னெடுக்கவுள்ளோம். குறித்த போராட்டத்தில் சகலரும் அரசியல், இன, மத மற்றும் பேதங்கள் கடந்து, தமிழ் மக்களினுடைய இருப்புக்களைத் தக்கவைக்க ஒன்றினையுமாறு வேண்டிக்கொள்கின்றேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

த.சுபேசன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now